வீடு கட்டிக் குடியேறும் யோகம் யாருக்கு?

கேள்வி:- எனது ஜாதகமும், எனது மகள் ஜாதகமும் அனுப்பி இருக்கிறேன். நாங்கள் பெங்களூரில் வசித்து வருகிறோம். கடந்த 6 வருடங்களாக சொந்தவீடு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் இதுவரை ஒன்று கூட அமையவில்லை. வீடு வாங்கும் முயற்சியை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறோம். காரியம் முடிகிற தருவாயில் தடை ஏற்படுகிறது. எங்களுக்கு எப்பொழுது சொந்த வீடு அமையும். வீடுகட்டிக் குடியேறும் யோகம் உண்டா? அல்லது வீடு வாங்கி குடியேறும் யோகம் உண்டா? -(எல்.சாந்தி, பெங்களூர்).

பதில்:- தங்கள் ஜாதக அடிப்படையில் பார்க்கும் பொழுது, லக்னாதிபதி செவ்வாய் 12-ல் மறைந்து சனியால் பார்க்கப்படுகிறார். பார்க்கும் சனியும் வக்ரம் பெற்றிருக்கிறார். நவாம்சத்திலும் சனி, செவ்வாய் பார்வை இருக்கிறது. பூமிகாரகன் என்று வர்ணிக்கப்படும் செவ்வாய், பகை கிரகங்களால் பார்க்கப்படும் என்றால் கொடுக்கும் பலன்கள் தடுக்கப்படும். அடுக்கடுக்காக பல வீடு பார்த்தாலும், எடுத்த முயற்சிகளில் எல்லாம் தடைகளே உருவாகும்.

பூமியோகம் என்பது ஒரு மிகப்பெரிய யோகமாகும். அந்த யோகத்தை நாம் பெற வேண்டுமானால், ஜாதகம் நமக்குச் சாதகமாக இருக்க வேண்டும். உங்கள் புதல்வியின் ஜாதக அடிப்படையில் பார்த்தால் அவர் பிறந்த தேதி 8, மாதமும் எட்டு, எட்டுக்குரிய சனி கிரகம் சந்திரனோடு ஜாதகத்தில் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் பூமிகாரகன் செவ்வாய், சந்திரனுக்கு எட்டில் மறைந்து விட்டார். நவாம்சத்தில் செவ்வாய், சனி சேர்க்கை உள்ளது. எனவேதான் இருவர் ஜாதக அடிப் படையிலும் பார்க்கும்போது வீடு வாங்கும் முயற்சியில் தாமதம் ஏற்படுகிறது.

இருப்பினும் தற்சமயம் உச்சம் பெற்ற குருவின் பரிபூரண பார்வை, உங்கள் புதல்வியின் ராசியிலும், வீடு இடம்பற்றிக் குறிக்கும் இடத்திலும் பதிகிறது. எனவே இனி வரும் மாதத்திற்கு மேல் புதிய வாய்ப்புகள் வரலாம். நல்ல வீடாகவே அமையும். செவ்வாய் பலம் பெற்றிருந்தால் தான், வீடு கட்டிக் குடியேறும் யோகம் வாய்க்கும். பலம் பெறாவிட்டால் பிறர் கட்டிய வீட்டை விலைக்கு வாங்கிக் குடியேறலாம். பூமிநாத சுவாமி வீற்றிருந்து அருள் வழங்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது. வாரம் தோறும் சனிக்கிழமை பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள்.

கேள்வி:- 
எனக்கு ராகு திசையில் சுக்ர புத்தி நடைபெறுகிறது. 10-ல் குரு வக்ரம் பெறும்பொழுது, அரசாங்க வேலையில் பிரச்சினை ஏற்பட்டு பதவி இழந்து விட்டேன். ஆனால் தற்சமயம் சாதகமான தீர்ப்புக் கிடைத்துவிட்டது. மீண்டும் எனக்கு எப்பொழுது அரசாங்க வேலை கிடைக்கும்? -(எஸ்.ராஜசேகரன், மயிலாடுதுறை).

பதில்:- 
தங்கள் ஜாதக அடிப்படையில் தற்சமயம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. சனி, சந்திரனோடு கூடியிருக்கிறார். அதைக் குரு பார்க்கிறார். எனவே, குருச்சந்திர யோகமும் உருவாகிறது. குரு பார்க்கும் சனியால் தடைகள் அகலும். சிம்மத்திற்கு குரு வந்த பிறகு அதன் பார்வை மேஷத்தில் பதியும். அப்பொழுது உங்கள் ராசி முழுமையாக புனித மடையப் போகிறது. எனவே வருகிற ஜூன் மாதத்திற்கு மேல், மீண்டும் அரசாங்க வேலை கிடைக்கக் கூடிய வாய்ப்பு உண்டு.

கேள்வி:- எனது ஜாதகத்தை அனுப்பி இருக்கிறேன். நான் அரசாங்க வேலை கிடைத்த பிறகே திருமணம் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் இப்பொழுது என் ஜாதகத்தைப் பார்ப்பவர்கள், திருமணம் ஆன பின்புதான் எனக்கு அரசு வேலை கிடைக்கும் என்கிறார்கள். மேலும் கடந்த 3 வருடங்களாக என் ஜாதகத்தைப் பார்ப்பவர்கள் நாகதோஷம் இருப்பதாக சொல்கிறார்கள். சிலர் என் ஜாதக கட்டம் போல் இருக்கும் ஆண் பிள்ளையைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்கிறார்கள். நல்ல பதில் தாருங்கள். -(ஆர்.பொற்கொடி, கோவில்பட்டி).

பதில்:- தங்கள் ஜாதக அடிப்படையில் பார்க்கும் பொழுது, களத்திர ஸ்தானாதிபதி புதன் சுக்ரன் வீட்டில் சஞ்சரிக்கின்றார். அவரை லக்னாதிபதி குரு களத்திர ஸ்தானத்தில் இருந்து கொண்டு பார்க்கிறார். உத்தியோக ஸ்தானாதிபதி சுக்ரன் சனியோடு இணைந்திருக்கிறார். எனவே முதலில் திருமண யோகமே அதிகம் உள்ளது. பிறகுதான் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. தனியார் துறையில் வேலை கிடைப்பதற்கான அமைப்பில் கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது.

அதே நேரத்தில் 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பதால், நாக தோஷ வகையைச் சார்ந்த ஜாதகமாக உங்கள் ஜாதகம் இருக்கிறது. திருநாகேஸ்வரம் சென்று வந்துவிட்டோம். இப்பொழுது நாக தோஷம் இருப்பதாகச் சொல் கிறார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். ஜாதகத்தில் நாக தோஷம் இருப்பது எப்பொழுதுமே இருக்கும். அதற்குரிய பரிகார வகைகளில் ஒன்றுதான் திருநாகேஸ்வர வழிபாடு. வழிபாட்டின் மூலமாக சர்ப்ப தோஷத்தின் பாதிப்பு களைக் குறைக்க இயலும். ஆனால் அதே நேரத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் மணமகனின் ஜாதகத்திலும் இதே போல 2-ல் ராகு, 8-ல் கேது இருக்கும் ஜாதகமாக அமைந்தால் தான் பொருத்தம் நன்றாக இருக்கும். ஒற்றுமை நன்றாக அமையும். வரும் மார்ச் 16-க்கு மேல் உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கேள்வி:- எனது ஜாதகத்தை அனுப்பி வைத்துள்ளேன். தற்சமயம் நான் மளிகைக் கடை நடத்தி வருகிறேன். மாற்றுத் தொழில் தொடங்கலாமா? என்று யோசித்து வருகிறேன். அதைச் செய்யலாமா?. இது தவிர கடந்த 10 வருடங்களாக எனது தாய் தந்தை இருவரும் என்னுடன் பேசுவதில்லை. இந்த நிலை மாறுமா? -(எம்.கோபி, செங்கல்பட்டு).

பதில்:- தற்சமயம் தங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. எனவே கிளைத் தொழில் தொடங்க இன்னும் இரண்டாண்டு பொறுத்திருக்க வேண்டும். நடத்தும் தொழிலில் இடமாற்றம் இருந்தால் மாற்றிக் கொள்ளலாம். பெற்றோர் ஸ்தானத்தைப் பார்க்கும் பொழுது திருப்திகரமாக இல்லை. மாதகாரகனுடன் ராகு இருக்கிறார். பிதாகாரகனை சனி பார்க்கிறார். இருப்பினும் அம்சத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு வீற்றிருந்து லக்னத்தைப் பார்ப்பதால், தமிழ் வருடப்பிறப்பு கழிந்து, வரும் ஜூன் மாதத்திற்கு மேல் பெற்றோரிடம் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து, பேசிக்கொள்ளும் சூழ்நிலை உருவாகலாம்.

கேள்வி:- என் தங்கையின் ஜாதகத்தை அனுப்பி இருக்கிறேன். கடந்த ஒரு சில ஆண்டுகளாக வரன் தேடியும் ஒன்றும் சரியாக அமையவில்லை. நிறையக் கோவில்களுக்குச் சென்று பரிகாரம் செய்துவிட்டோம். எப்பொழுது திருமணம் கூடிவரும்? -(என்.புவனா, திருச்சி).

பதில்:- தாங்கள் அனுப்பிய ஜாதகப்படி பார்க்கும் பொழுது தற்சமயம் குருவின் பார்வை ராசியில் பதிகிறது. எனவே வியாழ நோக்கம் இருக்கிறது. இருப்பினும், தெசாபுத்தி என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டுமானால், பிறந்த தேதி, செல்நீக்கி இருப்பு ஆகியவைகளை எழுத வேண்டும். தாங்கள் அனுப்பிய ஜாதகத்தில் பெயரும் குறிப்பிடவில்லை. ராகு இருக்கும் இடமும் குறிப்பிடவில்லை. பிறந்த தேதியும் எழுதவில்லை. சரியான ஜாதக நகல் அனுப்பிவைக்கவில்லை. (‘தினத்தந்தி’ வெள்ளிமலர் கேள்வி-பதில் பகுதிக்கு தங்கள் சந்தேகங்களை அனுப்புபவர்கள் முழுமையான ஜாதக நகல், தெளிவான கேள்விகள் மற்றும் முழு முகவரியுடன் அனுப்புவது நல்லது) உங்கள் ராசியை மட்டும் வைத்துப் பார்க்கும் பொழுது மார்ச் மாதத்திற்கு மேல் வரும் திருமணப் பேச்சுகள் கைகூடி வரலாம்.

கேள்வி:-
 எனது மகனின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். எம்.சி.ஏ படித்துள்ளார். அவருக்கு நல்ல கம்பெனியில் வேலை கிடைக்குமா? எப்பொழுது திருமணம் செய்வது நல்லது? -(ஆர்.மகாலிங்கம், சேலம்).

பதில்:- உங்கள் புதல்வரின் ஜாதகத்தில் தற்சமயம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. எனவே அது முடிந்த பிறகு திருமணம் செய்வதே நல்லது. ஏப்ரல் மாதத்திற்கு மேல் நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரியும் வாய்ப்பே அதிகம் உண்டு.

கேள்வி:- 
எனக்கு விருச்சிக ராசி. அனுஷம் நட்சத்திரம். கடையில் வேலை பார்த்து வருகிறேன். சுயமாக மருந்துக் கடை தொடங்கலாமா? அப்படித் தொடங்கினால் எப்பொழுது கடை வைக்கலாம்? -(கே.சுந்தரி, மதுரை).

பதில்:- 
உங்கள் ராசியின் அடிப்படையில் மருந்து தொழில் பொருத்தமான தொழில் தான். ஜென்மச் சனியின் காலம் என்பதால், அது விலகிய பிறகு தொழில் தொடங்குவதே நல்லது. அதுவரை ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதமிருந்து சனிபகவானை வழிபட்டு வருவது நன்மை தரும்.