ஜெனிவாவில் முக்கிய திருப்பம்…! ரஸ்யா, சீனாவும் ஆதரவு!

ஜெனிவாவில் முக்கிய திருப்பமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் ஒத்துழைப்புடன் அமெரிக்கா கொண்டு வரவுள்ள, சிறிலங்கா தொடர்பான தீர்மானத்துக்கு சீனா, ரஸ்யா ஆகிய நாடுகளும் ஆதரவளிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவுடன் முரண்படும் இரண்டு பிரதான நாடுகளான ரஸ்யாவும், சீனாவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எப்போதும் சிறிலங்காவுக்கு ஆதரவாக இருந்து வந்துள்ளன.

சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு இந்த நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன.

எந்தவொரு நாட்டினதும் உள்நாட்டு விவகாரத்தில் அனைத்துலக தலையீட்டுக்கு இவை எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளன.

எனினும், சிறிலங்காவின் இணக்கப்பாட்டுடன், இந்தவாரம் ஐ.நா மனித உரமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தில், அனைத்துலக தலையீட்டுடன், உள்நாட்டு விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரஸ்யாவும், சீனாவும், இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கலாம் அல்லது வாக்களிப்பின் போது நடுநிலை வகிக்கலாம் என்று கருதப்படுகிறது.

தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் போது, சிறிலங்காவின் நட்புநாடுகள் ஒரே அணியாக நிற்கும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா தயாரித்துள்ள வரைவுத் தீர்மானம், வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர், அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, வரும் 30ஆம் நாள் வாக்கெடுப்புக்கு விடப்படும்.