ஐ.நாவின் தனிச் செயலகம் கொழும்பில்.

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலையின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின், சிறப்பு செயலகம் ஒன்றை கொழும்பில் அமைப்பதற்கு முன்வைக்கப்பட்ட பரிந்துரையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் பரிந்துரைகளில், சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலையைக் கண்காணிக்கவும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது, எல்லா மனித உரிமைத் தீர்மானங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது தொடர்பாக ஆலோசனை வழங்கவும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் முழு அளவிலான செயலகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் தனியான செயலகம் ஒன்றை சிறிலங்காவில் அமைக்கும் பரிந்துரைக்கு இணங்கப் போவதில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும், கொழும்பில் தற்போதுள்ள ஐ.நா பணியகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.