தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தமைக்கு வருந்துகின்றேன்! கோத்தபாய

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தமையை நினைத்து தான் வருத்தம் கொள்வதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த களத்தில் தோல்வியடையச் செய்து நாட்டை மீட்டதற்காக தான் வருந்துவதாகவும், அதன் காரணமாகவே இப்பொழுது என் மீது போர்க்குற்றங்களை சுமத்துகின்றார்கள் எனவும் அவர் தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையை தாம் நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் ஒரு குளிர்சாதன அறைக்குள் இருந்து கொண்டு இந்த அறிக்கையை அவர்கள் தயார் செய்திருக்கின்றார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு பிரச்சார வெளியீடுகளின் அடிப்படையிலேயே இவ்வறிக்கை அமைந்திருக்கின்றது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கப் படைகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இரு தரப்பினரையும் குற்றம் சாட்டியுள்ளதுடன், சர்வதேச நீதிமன்றம் ஒன்றை அமைத்து இது தொடர்பாக விரிவாக ஆராய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசாங்கத் தரப்பில் இருந்து இது தொடர்பாக பல்வேறு மறுப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியின் இளைய சகோதரரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் செயற்பட்ட இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், போர்க்குற்றச்சாட்டுக்களும் உண்டு.

எனினும், இது பற்றி அமைச்சர் ராஜித சேனாரத்தன குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவோ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவோ குற்றம் இழைத்தார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டால் விசாரிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சர்கள் பலர் ஐ.நா அறிக்கைக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.